மனந்திரும்பும் மானிடனை
இன்னோர் உவமையால்
இயேசு சொன்னார்.
தந்தை ஒருவனுக்கு
இரு புதல்வர்கள்
இருந்தனர்.
தரமற்ற தம்பி
சொத்தைப் பிரிக்க
தந்தையோடு தர்க்கமிட்டான்.
கைகளில் கரன்சி இருந்தால்
உலகத்தின்
இன்பங்களையெல்லாம்
சட்டைப்பையில்
சுருட்டிக் கொள்ளலாம்
என்பது அவன் எண்ணம்.
தந்தையின் அறிவுரைகள்
எருமையில் காலில் மிதிபட்ட
பறவை முட்டையாய்
பயனற்றுப் போயின.
வேறு வழியின்றி
தந்தையும்
இருந்த சொத்தை
இரண்டாக்கினார்.
பாதி சொத்தை
இளையவனுக்குக் கொடுத்தார்.
அவன்
சுவர்க்கத்தையே தன்
சுருக்குப் பைக்குள்
சொருகிக் கொண்டதாய் ஆனந்தித்தான்.
சொத்துக்களை விற்று
பணமாக்கினான்,
ஊதாரி நண்பர்களே
ஆதாரமென்று நம்பினான்.
நண்பர்களோடு
தூரதேசம் சென்று
பணத்தைப் பாய்ச்சி
ஆனந்தத்தை அள்ளினான்.
மதுவின் கரைகளில்
கண்ணயர்ந்து
மாதுவின் கரங்களில்
விழித்தான்.
தகாத பாதைகளில்
தவறாமல் நடந்தான்.
மதகு திறந்த
அணையில்
தண்ணீர் தீர்வது எளிதல்லவா.
அதுவும்
தண்ணீர் வரத்தே இல்லாத
அணையெனில் ?
சொத்துக்கள்
தீப்பந்தம் பட்ட
பனித்துளி போல
உலர்ந்து மறைந்தது.
ஊதாரித்தனத்தின் உச்சத்தில்
உறங்கி
விழித்தவனிடம்
உணவுக்கே மிச்சமில்லை.
தண்ணீர் பாயாத
அருவிகளில்
குளிப்பதற்கு ஆளிருக்குமா ?
பணம் தீர்ந்தது புரிந்ததும்
நண்பர்கள்
இரவோடு இரவாக
கூடு மாறி ஓடினர்.
உணவுக்காய்
வேலை தேடி அலைந்தான்
பன்றி மேய்க்கும் வேலை
பரிதாபத்துடன்
கொடுக்கப்பட்டது அவனுக்கு.
வறுமை துரத்த
பட்டாடை உடுத்தியவன்
பன்றிகளோடு புரண்டான்.
பட்டினி துரத்த
மதுவில் நீந்தியவன்
பன்றி உணவை பகிர்ந்துண்டான்.
பின்
அதற்குக் கூட வழியின்றி
அவதித் தீயில் விழுந்தான்.
வேதனைகளின்
வேல் குத்தியதில்
நிஜம் தெளிந்து வருந்தினான்.
தந்தையின் நேசம்
நெஞ்சுக்குள் நெளிய,
புத்தி தெளிந்தான் புத்திரன்.
மனதுக்குள் மொழியுரைத்தான்.
என் தந்தையிடம் செல்வேன்,
பாவங்களின் மேல்
படுத்துக் கிடந்த என் மேல்
அவர்
பரிதாபம் கொண்டால்,
‘வேலையாளாய் இருந்து
வேளை நகர்த்தவா’ என்று
வேண்டுவேன் என
உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான்.
அவமானம்
தலைமேல் அமர
தலை கவிழ்ந்தான்.
இல்லம் நோக்கி
இளையவன் வந்தான்.
தொலைவில் அவன்
நிழல் கண்டதும்,
தந்தையின் கரம் நீண்டது.
அவர் மனம்
மகிழ்ச்சித் தோட்டத்தில்
மலர் கொய்தது.
மண்ணை நோக்கிப் பாயும்
மழையாய்
மகனை நோக்கிப் பாய்ந்தார்
அவர்,
திரும்பியவன்
திருந்தியிருந்தான்.
அப்பா,
உமக்கும் வானகத்துக்கும்
எதிரான பாவம் ஏராளம் செய்தேன்.
மகனெனும் மரியாதை
என் உரிமையில்லை இப்போது.
வேலையாள் ஒருவனாக்கி
வேளைக்கு உணவளிப்பாயா
என்றான்.
கண்களில் சோகக்கடல் கொந்தளிக்க
இமைகளை உடைத்துக் கொண்டு
உப்பு அலை
கன்னங்களில் குதித்தது.
தந்தையோ
மகனைக் கட்டியணைத்தார்.
ஆனந்தக் கண்ணீரால்
அவன் முகம் நனைத்தார்.
கொழுத்த கன்றைக்
கொன்றார்
விருந்தொன்றை அமைத்தார்.
முதல்தர ஆடையணிவித்து
மிதியடி மோதிரம் தருவித்து
மகனை உச்சி மோந்து
உச்சத்தில் உலாவினார்.
மூத்தவன் வந்தபோது
ஆடல் சத்தத்தில் ஆடிப்போனான்,
விவரம் அறிந்து
கோபத்தில் குதித்தான்.
தந்தையை நோக்கி கேள்விகளை
எறிந்தான்.
தகாத உறவுக்காரனுக்கு
தரமான விருந்தா,
தவறாமல் இருந்த எனக்கு
தந்ததென்ன தந்தையே…
மூத்தவன் மூச்சில் வெப்பமிருந்தது.
தந்தை சொன்னார்.
உன் தம்பி
இறந்திருந்தான்
இப்போது உயிர்த்துவிட்டான்.
காணாமல் போயிருந்தான்
கிடைத்துவிட்டான்.
அதற்கே இந்த விருந்து.
நீயோ,
என்னுடனே இருக்கிறாய்
பிரியாத பிரியத்துடன்.
எனக்குள்ளதெல்லாம்
உன்னுடையதே.
தொலைந்தவை கிடைக்கையில்
ஆனந்தப்படு.
தவறுதல் மனித இயல்பு,
மீண்டு வருதலே
மனிதனின் மாண்பு.
என்றார்.
No comments:
Post a Comment