Friday, August 3, 2018

லாசரைப் பிரிகிறது மரணம்


லாசர்,
மார்த்தாள், மரியாளுக்கு
சகோதரன்.
இயேசுவின் நேசத்துக்குச்
சொந்தக்காரன்.

பிணியுற்ற லாசரை
பார்த்துவிட்டு,
பயணம் தொடர்ந்தார் பரமன்.
சிலநாளில்
லாசர் இறந்து விட்டான்.

லாசரின் மரணம்
இயேசுவின் புதுமைக்கான
ஓர் களம்.

லாசரின் பிரிவு
இயேசுவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இயேசு திரும்பினார்.
லாசர் வீட்டை நோக்கி
நேசர் நடந்தார்.

எதிர்கொண்டு
கண்ணிரண்டில்
கண்ணீர் மொண்டு
கால் தொட்டு கதறினர்
சகோதரியர்.

இயேசுவே
நீர் இருந்திருந்தால்
அவன் இறந்திருப்பானா ?
நீர்
விலகியதால் தானே
உடலைவிட்டு விட்டு
அவன் உயிர்
விலகிச் சென்றது.

மீண்டும் கண்ணீர்
இமை இடித்துக் கொட்டியது.

கலங்கிய கர்த்தர்,
கல்லறை எங்கே என்றார்.

உடலை அடைத்திருந்த
குகை
தூரமாய்,
ஒரு ஓரமாய் இருந்தது.

கல்லறை வாசலில்
கல்லொன்று கதவாகி இருந்தது.

திறவுங்கள்,
கல்லறையின் கதவை
இயேசு சொன்னார்.

நான்கு நாள் ஆன உடல்
நாற்றத்தில் இருக்குமே,
வினா விழித்தெழுந்தது.

நம்புங்கள்,
வல்லமையின் ஒளி
கல்லறை வரை பாயவேண்டும்.
நானே ஒளி !

கல்லறை திறக்கப்பட்டது.

இயேசு கட்டளையிட்டார்.
‘லாசரே வெளியே வா’

அதிர்ச்சிக் குரல்களும்
ஆச்சரியக் குரல்களும்
மலைகளில் மோதி
மண்டை உடைய,
லாசர் உயிர்பெற்று வந்தான்.

கட்டவிழ்த்து அவனை
நடக்க விடுங்கள்
இயேசு சொன்னார்.

லாசரின் உடலைச் சுற்றியிருந்த
துணி அவிழ்க்கப்பட்டது
கூட்டத்தினர் மனசில்
துணிவு சுற்றிக் கொண்டது.

இயேசு
சாவுக்கு சாவும அடித்தார்
வாழ்வுக்கு
வரவேற்புக் கம்பளம் விரித்தார்.

அஞ்சிய கூட்டம்
அகல,
எஞ்சிய கூட்டம்
மீட்பின் கூட்டத்தில்
மனசை நட்டது.

No comments:

Post a Comment