இயேசு
எரிகோ செல்லும் வழியில்
பார்வையற்ற ஒருவன்
அமர்ந்து
அகப் பார்வை உள்ளோரிடம்
பிச்சை சேகரித்துக் கொண்டிருந்தான்.
திடீரென
சத்தங்கள் அவனை
சூழ்ந்து கொண்டன.
என்ன சத்தம் ?
அருகில் இருந்தவரை
வினவினான்,
இயேசு செல்கிறார்
என்று பதில் கூறினர்.
சட்டென்று அவனுடைய
பிச்சைப் பாத்திரத்தில்
ஓர்
பிரபஞ்சம் விழுந்ததாய்,
உள்ளுக்குள் விழுந்து கிடந்த
நம்பிக்கை எலும்புகள் எல்லாம்
நலம் பெற்று மிளிர்ந்தன.
இயேசுவே
இரக்கம் வையும் என
கதறினான்.
‘இதென்ன கூச்சல் ?
நாகரீகமற்ற கத்தல்
அவர் பெரியவர்
பேசாதிரு’
என அதட்டினர் அவனை.
அவர்களோ
முகத்தில் கண்கள் கொண்டவர்கள்
இவனோ
நம்பிக்கைக்கு
பார்வை முளைத்தவன்.
நிறுத்தாமல் கத்தினான்.
இயேசு நின்றார்.
அவனைக் கூட்டி வாருங்கள்
என்றார்.
குருடன் வந்தான்,
அப்போதே
பார்வை பெற்ற ஆனந்தம்
அவன் முகம் முழுதும்.
இயேசுவே என்றான்.
‘நான் என்ன செய்ய வேண்டும்’
இயேசு வினவினார்.
பார்வை இழந்தவனுக்கு
தேர்வை வைக்கிறார் தேவன்.
நான்
பார்வை பெற வேண்டும் ஆண்டவரே
என்றான் அழுக்குப்
போர்வைக்குள் கிடந்த அவன்.
பெறு என்றார்.
பெற்றுக் கொண்டான்.
உன்னை நலமாக்கியது
நானல்ல.
என்மேல்
நீ கொண்ட நம்பிக்கையே
என்றார்.
அவனுடைய
கருப்பு வாழ்வின்
நிறுத்தப் புள்ளியாய்
இயேசு
கண்களைப் பரிசளித்து நகர,
அவன்
பார்வைக்குப் பரிகாரமாய்
பாதையை மாற்றினான்.
இயேசுவின்
சுவடுகளுக்குள் விழித்திருந்த
சத்தியத்தைத் தொடர்ந்தான்.
No comments:
Post a Comment