யெருசலேமில்
பெத்சதா என்றொரு குளம்
இருந்தது.
குணமாக்கும் குளம்.
பக்கத்தில் இருந்த
கட்டிடத்தின் கால்மனையில்
கட்டிலோடு கிடந்தான்
முப்பத்தெட்டு ஆண்டைய
பிணியாளிப் பாமரன் ஒருவன்.
தேவதூதர்கள்
குளத்தைக் கலக்கும் போது
முதலில் இறங்குவோர்
பிணி துறந்து
குணம் பெறுவர் என்பது
நம்பிக்கையாயிருந்தது.
இயேசு அவனிடம்
கனிவுடன் கேட்டார்.
குணமாக விரும்புகிறாயா ?
எனக்கு சொந்தம் இந்த
நோய் மட்டுமே,
என்னை குளத்துள் இறக்கிவிட
பொது நலக் கைகள்
இதுவரை வரவில்லை.
சுயநலக் குளியல்களையே
தரிசித்து தரிசித்து
மரத்துப் போய்விட்டது மனசு.
நோயாளி வருந்தினான்.
இயேசுவோ,
படுக்கையை மடித்து எடுத்துப்போ
நீ
குணம் பெற்றாய் என்றார்.
அந்நேரமே அவன்
வலி விலகி வலிமையானான்.
என் வார்த்தைகளைக் கேட்டு
வாழ்க்கையை கட்டுபவன்
என்றும்
சாவுக்குள் சஞ்சரியான்.
சத்தியமாய் அவன்
வாழ்வுக்குள் வந்திடுவான்.
கல்லறைகள் கலங்கும்
கடைசி நாள் வரும்,
நீதித் தீர்ப்பு அப்போது
நிறுத்தப்படாது.
மனம் திரும்புங்கள்
மனிதராகுங்கள்.
உள்ளத்தால் உள்ளவராகுங்கள்.
No comments:
Post a Comment