இயேசு ஒருமுறை
கடல் மீது நடந்து
சீடர்கள்
பயணித்துக் கொண்டிருந்த
படகுக்குச் சென்றார்.
நீர் மீது அவர்கால்கள்
காற்றைப் போல
மூழ்காமல் மிதந்தன.
நான்காம் ஜாம இருட்டில்
கடல் மீது
ஓர்
இருட்டு உருவம்.
பதறிய சீடர்கள்
பேயென்று பயந்து
அலறினர்.
‘அஞ்சாதீர்கள் நான் தான்’
கடல் மீது நடந்தது
பரிச்சயமான பரமன் குரல்.
விசுவாசமே
செயல்களின் சுவாசம்.
பகலை
திருடிச் சென்ற இருட்டு
அலைகளின் முதுகை
வருடிக் கிடந்த இரவு அது.
சின்ன கல் கூட
ஆழம் வரை மூழ்கித் தொலைக்கும்
நீரில்,
நீர் எப்படி நடக்கிறீர் ?
வினாக்கள் உள்ளுக்குள்
வினாத்தாள் தயாரித்தன.
பயம்
பதிலெழுதிக் கொண்டிருந்தது.
பேதுரு
ஆர்வத்தில் எழுந்தார்.
நானும் நடக்கவா ?
இயேசு.
நட என்றார்.
சில அடிகள்
கடல் மீது வைத்த பின்
பயத்தின் உள்ளே
வழுக்கினார் அவர்.
நம்பிக்கை மெல்ல
கைவிட்டுச் செல்ல
கால்கள் தண்ணீருள் தாழ்ந்தன
காப்பாற்றும் கடவுளே
காப்பாற்றும்.
பயத்தின் குரல் பரபரத்தது.
இயேசுவின் கரம்,
அவரைத் தாங்கியது.
விசுவாசம் பெரிது,
நம்பிக்கை இல்லாவிட்டால்
செயல்கள் செய்வது சாத்தியமில்லை.
பரமன் மொழிந்தார்.
No comments:
Post a Comment