Friday, August 3, 2018

இயற்கை இறைவனில் சங்கமம்


நீலக்கடலின் நீள்பாதையில்
படகில் ஒருநாள்
பயணித்தார் பரமன்
சீடர்களின் அருகாமையில்.

கடலின் கர்ப்பத்திலிருந்து
புயல்த் துண்டொன்று பதறி எழுந்தது,
அலைகள் எழுப்பிய பள்ளத்துள்
படகுகள் அலைக்கழிக்கப்பட்டன.

அலைகளின் மேல்
முரட்டுக் காற்று உட்கார்ந்து
கடிவாளம் இல்லாக் குதிரையை
கடற்பரப்பெங்கும்
ஓட விட்டுக் கொண்டிருந்தது.

வானத்து மேகத்தை
தொட்டு விடும் ஆவேசத்தில்
அலைகள்
எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தன,

காற்றின் சத்தமும்,
இரவின் வண்ணமும் சேர்ந்து
பயத்தின் சதுப்பு நிலத்துக்குள்
சீடர்களைப் பதுக்கியது.

நித்திரையிலிருந்த இயேசுவை
பயந்த சீடர்கள்
பைய எழுப்பினர்.

இயேசுவோ,
காற்றோடும் கடலோடும்
அமைதி என்று சொல்லி
சாந்தப் படுத்தினார்.

சீடர்கள் வியந்தனர்.
அலைகளின் மொழியும்
அறிந்தவர் இவரோ,
காற்றின் காதுகள்
தெரிந்தவர் இவரோ ?

உடல்களோடு மட்டுமல்ல
கடல்களோடும்
கட்டளை இடுகிறாரே.
என
வியப்பின் எல்லையை
தயக்கமின்றி விரித்தனர்.

No comments:

Post a Comment