Friday, August 3, 2018

கூரைக்குள் வானம்



ஒரு வீட்டில்
பேசிக்கொண்டிருக்கிறார்
இயேசு.

கட்டிலோடு தூக்கி வந்தனர்
ஒரு முடக்குவாதக் காரனை.

நாயகனைச் சுற்றி
மக்கள் கூட்டம்,
வாசல்களில் நசுக்கப்பட்டு
காற்று கூட
வெளிநடப்பு செய்தது.

முடக்குவாதக் காரன்
என்ன செய்வான் ?

நல்லவேளை
அவனை படுக்கையோடு
தூக்கி வந்த கூட்டம்
கூடவே
நம்பிக்கையையும்
கூட்டி வந்திருந்தது.

ஐந்து பக்கங்களும்
அடைந்துபோன வீட்டுக்கு
ஆறாவது பக்கமாய்
கூரை கதவாகி
கூப்பிட்டது.

நோயாளி
கூரை வழியே
பரமனின் முன் இறக்கப்பட்டான்.
பரமன் இரக்கப்பட்டார்.

கொடுக்கிற தெய்வம்
கூரையைப் பிய்த்தும் கொடுக்கும்,
கூரை பிய்த்துக் கேட்டாலும்
கொடுக்கும்.

இயேசு
அவன் பாவங்களை மன்னிப்பதாய்
பகிரங்கப் படுத்தினார்.

ஏட்டுச் சுருளுக்குள்
சுருண்டு கிடந்த கூட்டம்
விரிந்த இயேசுவின் மனசுக்கு எதிராய்
இருண்ட கேள்விகளை
மனதுக்குள்
உருட்டிக் கொண்டிருந்தது.

வானங்களில் வசித்தவர்
மனங்களை வாசித்தார்.
ஏன்
தேவையற்ற கேள்விகளோடு
அவையில் இருக்கிறீர்கள் ?

நான் மனுமகன்
எனக்கு
பாவிகளை தண்டிக்கும்
அகங்காரம் இல்லை.
பாவங்களை மன்னிக்கும்
அதிகாரம் உண்டு என்றார்.

சொல்லிவிட்டு
முடக்குவாதக் காரனை நோக்கி,
எழு
படுக்கையை எடு.
நட…
நல்வழியில் நட. என்றார்.

நோயில் சுற்றப்பட்டு
பாயில் வந்திறங்கியவன்,
நோயைச்
சுருட்டி எறிந்து விட்டு
பரவசப் பயணம் ஆரம்பித்தான்.

கூட்டம்
பிரமிப்பின் வரைபடத்தை
விழிகளில் வரைந்தது.

No comments:

Post a Comment