பன்னிரண்டு ஆண்டைய
பிணி அவளுக்கு.
விலகவில்லையே எனும் வலி
விலகாதோ எனும் கிலி
எல்லாம் சேர்ந்து அவளை
கண்ணீர் தேசத்தின்
எல்லைக்குத் தள்ளின.
மிச்சமிருந்த நம்பிக்கையை
முடிச்சிட்டு எடுத்துக் கொண்டு
இயேசுவின்
பொன்னடிப்பாத
மண்ணடிச் சுவடைத் தேடி
ஓடினாள்.
நட்சத்திரங்கள் நெருக்கியதால்
மேகத்துக்குள்
மறைந்துபோன நிலவாய்,
கூட்டத்தின் இடையே
கடவுள் நடந்தார்.
பெரும்பாடுள்ள பெண்
தன் நோய்க்காய் நேரம் ஒதுக்க
இறைவனுக்கு இயலாதெனும்
நிலையறிந்து,
ஆடையைத் தொட்டாலே
என்
ஆயுள் நீளுமே,
வலியின் விரல்கள் வீழுமே
என்று உள்ளத்தில் எண்ணினாள்.
ஆடையின் ஓரம் தொட்டாள்.
ஆச்சரியத்தின் ஓர் இழை
அங்கே
ஆடைகளின் வழியே
ஆண்டவனுக்குள்ளிருந்து வந்தது.
தொட்ட வினாடியில்
அவளைத்
தொடர்ந்த வியாதி,
சூடுபட்ட பூனையாய் ஓடியது.
இயேசு திரும்பினார்,
மாது நடுங்கினாள்,
என் ஆடையைத் தொட்டது யார் ?
இயேசுவின் வார்த்தைகள்
சீடர்களை குழப்பின.
புயலடிக்கும் பூந்தோட்டமாய்
கூட்டம் நெருக்கும் இடம் இது !
என்னைத் தொட்ட
காற்று ஏதென்று
கடவுளிடமிருந்தே கேள்வியா ?
சீடர்களின் கேள்வி முடியும்முன்,
மண்டியிட்டழுதாள் மாது,
மன்னியுங்கள் மகானே,
கரம் தொடும் வரம் வராதோ எனும்
பயத்தின் நகம் கிழிந்ததால்,
ஆடையை மெல்ல தீண்டினேன்,
என் வலியின் தேசம் தாண்டினேன்,
நோய்
போய் விட்டது.
மன்னியுங்கள்.
இயேசு புன்னகைத்தார்,
நம்பினவர்களை
வாழ்க்கை நடுவழியில் விட்டுச் செல்லாது,
நீ நலமானாய்,
உன் நம்பிக்கையை
நலமாய் காத்துக் கொள்.
No comments:
Post a Comment