Friday, August 3, 2018

இறந்த சிறுமி உயிர்க்கிறாள்



தொழுகைக் கூடத் தலைவன்
இயேசுவைப் பணிந்தான்,
கண்களில் ஈரமாய் கண்ணீர்
நெஞ்சில்
பாரமாய் பாசம்.

என் மகள் இறந்துவிட்டாள்.
நீர் வந்தால்
மீண்டு வருவாள்
மீண்டும் வருவாள்
சாவை ஒதுங்கச் சொல்லி
ஓடி வருவாள்.
உம் கைகளை வைப்பீரா ?
கிழிந்த என் மனசை தைப்பீரா ?

ஆம்
என்னும் பதிலை மட்டுமே வேண்டி
அழுது நின்றான்

வேண்டியவர்களை
விலக்கிவிடுவது வேந்தனின்
செயல் இல்லையே,
ஒத்துக் கொண்டு ஓடினார்.

சிறுமியின் வீட்டு
வாசலெங்கும் மரண வாசனை.
தோளில் தாங்கிய மாதா
மார்பில் அடித்து
கண்ணீர் வடித்தாள்.

ஒப்பாரிகளின் சத்தத்தில்
மரணத்தின் ரணம் கசிந்தது.

இயேசு சொன்னார்,
சிறுமி தூங்குகிறார்
சாகவில்லை.
விலகிப் போங்கள்.

கூட்டம்,
நகைச்சுவையைக் கேட்டதாய்
நகைத்தது.

செத்துப் போனதை
ஒத்துக் கொண்ட கூட்டம்,
பொத்திப் பொத்திச்
சிரித்தது.

இயேசு
சிறுமியின் கையை
மெல்லமாய் தொட்டார்.

இமைகள் விலக
சிறுமி சட்டென்று எழுந்தாள்.
கனவு கண்டு விழித்ததாய்
கண்களை விரித்துச் சிரித்தாள்.

நகைத்த கூட்டம்
திகைத்தது.
சிறுமி உயிர்த்தெழுந்தாள் !
கூட்டத்தினரிடையே
சத்தம் செத்து விழுந்தது.

அமைதியாய் நகர்ந்தார்
இயேசு,
பணி முடிந்த திருப்தியில்.
சில மனங்களை
தன்பால் முடிந்து கொண்டு.

பரபரப்புச் செய்தி
பரவலாயிற்று.

No comments:

Post a Comment