மெல்லிய ஆடையால்
மேனி பொதிந்த
பகட்டுப் பணக்காரன்
ஒருவன் இருந்தான்.
அவன்
மிதியடிகள் கூட
செல்வத்தைப் பறைசாற்றின.
அவன் வீட்டு வாசலில்
புண்களின் புகலிடமான
பழுத்த உடல் ஏழை ஒருவன்
பசிக்கு உணவு கேட்டு
படுத்திருந்தான்.
பட்டினியோடு
ஆயுட்கால ஒப்பந்தம் கொண்டிருந்த
அவன் பெயர்
லாசர்.
பந்தியில் சிந்திய உணவு கூட
பாவம் இவனுக்கு
உணவாகவில்லை.
பணக்காரனோ
உண்டு குடித்து
உல்லாசத்தின் உச்சியில்
நில்லாமல் நாட்டியமாடினான்.
ஏழை லாசரோ
பருக்கைகளுக்காய்
இருக்கைகளை நோக்கி
இரு கைகளை ஏந்திக் கிடந்தான்.
நாய்களின் நாக்குகள்
இவன் புண் கழுவும்.
வேதனையின் நாவுகள்
இவன் உயிர் கவ்வும்.
ஏழை இறந்தான்
தேவதூதரின் தேரிலேறி
விண்ணரசில் அமர்ந்தான்.
பணக்காரனும் மடிந்தான்
எரியும் நெருப்பில்
எறியப்பட்டான்.
ஏழையவன் இறைவனின்
அருகே இருப்பதை கண்டு
பணக்காரன் கதறினான்.
ஆண்டவரே,
ஏழையின் விரல் நுனியின்
ஒரு சொட்டு ஈரத்தை அனுப்பும்.
அனலுக்குள் அழிகிறேன்
இரக்கம் கொண்டு
அவனை இறங்கச் சொல்லும்.
ஆண்டவர் சொன்னார்,
வாழும்போது நீ
சுயநல சிந்தனைகளில்
சுருக்கு மாட்டிக் கிடந்தாய்,
சொகுசுப் பெட்டிகளில்
அடைகாக்கப்பட்டாய்
இவனோ
வலியோடு மட்டுமே வாழ்ந்தான்.
அங்கே நீ
செல்வங்களின் வாசனையில்
மயங்கிக் கிடந்தாய்
இவன்
உன் வீட்டு வாசலில்
பசியில்
மயங்கிக் கிடந்தான்.
இப்போது
வலி உனக்கு
வாழ்வு இவனுக்கு.
இங்கே
தீர்வுகளே தீர்ப்புகள்.
பணக்காரன் பதறினான்.
அப்படியென்றால் அவனை
என் வீட்டுக்கு அனுப்பும்,
என் சகோதரர்களாவது
சாபத்துக்கு அப்பால் சஞ்சரிக்கட்டும்.
என்னைப் போல் அவர்களும்
எரியும் நெருப்பில்
கரிய வேண்டாம்.
பயத்திலாவது கொஞ்சம்
பொதுநலம் பேணட்டும்.
இறந்த ஒருவன்
இறங்கிச் சொன்னால்
நம்புவர் அவர்.
பணக்காரன் விண்ணப்பித்தான்.
கடவுள் மறுத்தார்.
இல்லை.
அவர்களுக்கு
இறவா
இறைவாக்கினர் உள்ளனர்.
மோயீசனை மறுதலிப்போர்
லாசரையும் மறுதலிப்பர்.
அவர்களின் முடிவு
அவர்களின்
செயல்களைச் சார்ந்ததே.
மனிதாபிமான முளைவிடாத விதைகள்,
பயனற்ற பதர்கள்.
அவற்றின் புகலிடம்
தீயின் நாக்குகளே
என்றார்.
பணக்காரன்
வழியின்றி அனலில் அழுதான்
ஏழை
வலியின்றி சுவர்கத்தில் சிரித்தான்.
No comments:
Post a Comment