Friday, August 3, 2018

கானாவூர் திருமணம், அற்புதத்தின் ஆரம்பம்


முதலவன் செய்த
முதல் புதுமை இது.

கலிலேயாவில் கானாவூரில்
கல்யாணம் ஒன்று
கலகலப்பாய் நடந்தது.

பிந்தியவர்க்கு
பந்தியில் பரிமாற
திராட்சை ரசம் இல்லாமல்
திருமண வீடு
குறையொன்று கண்டது.

இயேசுவும், தாயும், சீடரும்
விருந்துக்காய்
வந்திருந்தனர்.

இறைவனின் திட்டம்
அன்னை மரி
அறிந்திருக்க வேண்டும்.

மகனின் மனசுக்கு
ஓர்
மனு அனுப்பினார்.
திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது!.

விண்ணப்பத்தை வாங்கிய
விண்ணக மகன்
வினவினார்.

என் நேரம்
வரவில்லையே அம்மா?
புதுமைகளில் படிக்கட்டுகளை
இப்போதே அடுக்குதல்
அடுக்குமா ?

தாய் தடுமாறவில்லை,
பணியாளரைப் பார்த்தார்
இயேசு சொல்வதை
மறுக்காமல் செய்யுங்கள்
என்றார்.

ஆறு கற்சாடிகள்
யூதரின்
ஒழுங்கு முறைப்படி
அங்கிருந்தது.

தண்ணீர் நிறையுங்கள்
சாடிகளின் கழுத்துவரை !
அமைதியாய் சொன்னார்
ஆண்டவர்.

இதென்ன வினோதம் ?
கைவசம் ரசமுமில்லை,
வாங்கி வர நேரமுமில்லை.
இதிலே
நீர் எதற்கு
நீர் நிறைக்கச் சொல்கிறீர் ?
எனும் கேள்வி
அவர்கள் உள்ளத்தில்
உருண்டிருக்க வேண்டும்.

உள்ளே ரசம் வேண்டும்
கூட்டமிருக்கிறது.
இயேசுவிடம்
அதற்கென ஓர்
திட்டமிருக்கிறது
என்று நினைத்த அவர்கள்,

இறைத்த தண்ணீர் எடுத்து.
நிறைத்து வைத்தனர்

இயேசு,
அவற்றை ஆசீர்வதித்தார்.

கிணற்றிலிருந்து
கரையேறி வந்த தண்ணீர்
திராட்சை இரமாய்
உருமாறியது !

பயமும், வியப்பும்
பற்றிக்கொள்ள
பணியாளர்கள் நடுங்கினர்.

திருமகன் தந்த
திராட்சை ரசமோ
சுவையில்
போட்டியின்றி வென்றது
புதுமையின்
முதலெழுத்தால் நின்றது.

விருந்தினர்
அருந்தினர்.
வியப்பில் விழிகள்
விரிந்தனர்.

No comments:

Post a Comment