இயேசு
நயீன் என்னும் ஊருக்குச்
சென்றார்,
கரம் பிடித்து நடக்கும்
கடல் அலைகளாய்
பெருங்கூட்டம் பின் தொடர்ந்தது.
ஊரின் வாசலில்
வாழ்வை
ஓர் சாவு வரவேற்றது.
கைம்பெண் ஒருத்தியின்
ஒரே மகன்,
வாழ்வின் ஊன்றுகோலால்
அவளுக்கிருந்த
ஒரே நம்பிக்கை.
அவர் எதிரே
பாடையில்
பயணித்துக் கொண்டிருந்தது.
தாயின் இதயம்
ஒப்பாரிகளை விழுங்கி
உயிரை
கண்கள் வழியே
வடித்துக் கொண்டிருந்தது.
மனசு இடைவிடாமல்
மரண வலியில்
துடித்துக் கொண்டிருந்தது.
இயேசு நின்றார்.
ஒளிக்குள்
ஒளியப் பார்க்கும்
ஓர்
இருட்டுத் துண்டமாய்
மரணம் அவர் முன்னால் நின்றது.
அந்தத் தாயின் வலியை
ஓர்
புதுமைத் தூரிகையால்
துடைத்துவிட முடிவெடுத்தார்.
முன் சென்று
பாடையைத் தொட்டார்,
தூக்கி வந்தவர்கள் நின்றார்கள்.
கண்களால்
ஏன் என்றார்கள்.
இளைஞனே
எழுந்திரு. என்றார்.
மரணத்தோடு
இயேசு பேசியதை உணராமல்
உடலோடு
அவர் உரையாடுவதாய் எண்ணி
கூட்டம் நகைத்தது.
இளைஞன் எழுந்தான்.
பாடை தூக்கியவர்கள்
பயத்தைத் தூக்கினார்கள்.
இறந்து கிடந்தவன்
பேசத்துவங்கினான்,
பேசிக் கொண்டிருந்த கூட்டம்
வாயடைத்தது.
மிச்சம் மீதி இருந்த
அவ நம்பிக்கையை
அவிழ்த்தெறிந்தது.
ஆச்சரியச் செய்தி
ஊரெங்கும்
உச்சரிக்கப்பட்டது.
அச்செய்தி
யோவானின் காதுகளுக்கும்
போய் சேர்ந்தது.
அவர்
ஆயத்தப் பணிகளுக்காக
ஆண்டவரால்
அனுப்பப் பட்டவர்.
யோவான்
தன் சீடரை அழைத்து,
செல்லுங்கள் !
நாம் தயாரிக்கும் பாதைக்கான
மனுமகன் அவர் தானா
இல்லை இன்னோர்
அவதாரம் வருமா
என
அறிந்து வருங்கள் என்றார்.
அவர்கள்
இயேசுவை அணுகி வினவ,
இயேசுவோ
நீங்கள் கண்டவற்றை
அவருக்குச் சொல்லுங்கள்.
என்
செயல்களே எனக்கான
அடையாள அட்டை.
இதோ
நோயாளிகளின் நோய்களெல்லாம்
சொல்லிக் கொள்ளாமல்
ஓடுகின்றன.
பேய்களெல்லாம்
புறமுதுகு காட்டுகின்றன.
மரணத்தின் வாள்கள் கூட
முனை ஒடிந்து போகின்றன.
ஏழைகள்
நற்செய்தி பெறுகிறார்கள்.
அவரிடம் இதையெல்லாம்
அறிவியுங்கள்.
என்னை
விசாரணை செய்யாமல்
என்னில்
விசுவாசம் கொள்பவன்
பாக்கியவான் என்றார்.
No comments:
Post a Comment