பார்வையற்றிருக்கத் தான் என்று
கண்ணுடையோர் எல்லாம்
காணாமல் நடக்க,
பிறவிக் குருடன் ஒருவன்
கண்ணின்றி இருந்தான்.
பொருளாதாரம்
அவன் கையில்
பிச்சைப் பாத்திரத்தை
பிச்சையிட்டிருந்தது.
இருளுக்குள் கிடந்து
பாத்திரத்தில் விழும்
பொருளுக்குள் கிடக்கும்
இதயங்களை
கைகளால் தீண்டி
இதயத்தால் அழுது கொண்டிருந்தான்
அவன்.
இயேசுவே,
இவன் குருடனாய் இருப்பது
அவன் பாவமா ?
இல்லை ஜென்ம பாவமா ?
என்று கேட்டது
கூட்டம்.
இயேசு சொன்னார்,
நோயாளி
பாவத்தின் அடையாள அட்டை அல்ல
இங்கே
அருள் நடக்கும் பாருங்கள்
என்றார்.
உமிழ்நீரால் சேறுண்டாக்கி
அவன்
விழிமீது பூசினார்.
போ,
சீலோவாம் குளத்தில்
கண்களைக் கழுவு.
பார்வையைத் தழுவு என்றார்.
அவன்
பார்வை பெற்றார்.
பொருள் தடவி நடந்தவனுக்கு
அருள் உதவி கிடைத்தது.
மண்ணிலிருந்து முளைத்த
ஆதாமின் சந்ததிக்கு
மண்ணிலிருந்தே பார்வை
வழங்கப்பட்டது.
ஆனந்தத்தில் கிடந்தது
நம்பிக்கைக் கூட்டம்,
அதிச்சியில் உறைந்தது
எதிர்த்த கூட்டம்.
பெற்றோர் பரசவப் பட்டனர்
மற்றோர்
இயேசுவைத் தீர்க்க
அவசரப் பட்டனர்.
இயேசு அவர்களிடம்
குருடர்களுக்குப் பார்வை
இருக்கிறது,
இல்லையேல் கிடைக்கிறது.
நீங்களோ
காண்கிறது என்னும் கனவில்
காணாமல் கிடக்கிறீர்கள்
என்றார்.
No comments:
Post a Comment