Friday, August 3, 2018

அரச அலுவலர் மகன் குணமாதல்


கப்பர்நாகூமில் இருந்தது
அந்த
அரச அலுவலரின் இல்லம்.

அவர் மகன்
சாவின் நுனியில்
சக்தியின்றி
தொங்கிக் கொண்டிருந்தான்.

எந்நேரமும் அவன்
மரணத்தின் கழுத்தில்
மாலையாகலாம் என்பதை
அறிந்த தந்தை,
பாசத்தின் பச்சையம்
உலர உலரக் கலங்கினார்.

அப்போது தான்
அவருடைய
அச்சாணி சிதறிய
நம்பிக்கைத் தேருக்கு
புது அச்சாணியாய் வந்தது
அச்செய்தி.

இயேசு
கலிலேயாவில் இருக்கிறார்.

கடைசிக் கொழுகொம்பைத் தேடி
செடி
இடம் மாறி ஓடியது.

பேய்கள் பதறி ஓடுகின்றன,
நோய்கள் உதறி ஓடுகின்றன
தண்ணீர் திராட்சை இரசமாகிறது
என்றெல்லாம் வந்த
செய்திகள் அவனுக்குள்
புதிது புதிதாய்
விசுவாச விதைகளை விதைத்துச்
சென்றன.

ஓடினான்,
கலிலேயாவிற்கு.
அங்கு இயேசுவைக் கண்டு
இதயம் கதறினான்.

இயேசுவே வாரும்,
என்
மகனின் பிணிக்கு மருந்து
நீரே,
என் மகனெனும் கிளைக்கு
நீர் தான் வேரே,

அவன் சாகும் முன்
அவனை சமீபிக்க வேண்டும்,
உயிர்
அகலும் முன் அவனுக்கு
அருள வேண்டும்.

என் மகனைக்
குணமாக்க வேண்டும்,
என் நம்பிக்கைகளை
முடமாக்க வேண்டாம்.
என்று மன்றாடினான்.

இயேசு அவரை நோக்கி,
அருஞ் செயல் இல்லையேல்
நீங்கள்
பரம் பொருளை நம்புவதில்லை.

நீ போகலாம்,
உன் மகன் நலமானான்.
என்றார்.

அவரும் திரும்பி
மகனை நோக்கி ஓடினார்.
தொலை தூரத்து
இல்லம் நோக்கி.

மறுநாள்,
பயணத்தின் வழியில்
பணியாளர் வந்து,
மகன் பிழைத்தான் என்றனர்.

தந்தை
உச்சிவரை உற்சாகமானார்,
ஆனந்தத்தின்
ஆணிவேரோடு அறிமுகம்
கொண்டார்.

எப்போது நலமானான் என
ஆனந்தத்தில் வினவ,
நேற்று பிற்பகல் ஒருமணி
என்றனர்.
அது இயேசு
நலமாவான் என்றுரைத்த
நேரமென்று கண்டான் தலைவன்.

ஒரு வார்த்தை
தூரங்களை எல்லாம்
தாண்டி,
மகனை மீட்டதால்,
அவர் குடும்பமே
இயேசுவில் இணைந்தது.

No comments:

Post a Comment