இயேசுவின்
யெருசலேம் பயணத்தின் வழியில்
இயேசுவை
பத்து பேர் எதிர்கொண்டார்கள்.
அவர்களின்
மேனியெங்கும் தொற்றிக் கிடந்தது
தொழு நோய்.
அவர்களின்
விழிகளெல்லாம்
அழுது கொண்டிருந்தன
விரல்களெல்லாம்
விழுந்து கொண்டிருந்தன.
ஓர்
இலையுதிர்க் கால
மரத்தைப் போல,
நம்பிக்கையின் கடைசி இலை
காற்றிலும் கிளையிலுமாய்
ஊசலாட,
இயேசுவிடம் வந்தனர்.
இயேசுவே,
இரக்கமற்ற சமுதாயம்
எங்களை
முரட்டு இருட்டுக்குள்
பூட்டி விட்டது.
எங்களை வருத்தும்
நோய்களைத் துரத்தும்
என்றனர்.
இயேசு,
‘போய் உங்களை
குருக்களிடம் காட்டுங்கள் ”
என்றார்.
நோயைப் போக்கச் சொன்னால்
குருவிடம்
போகச் சொல்கிறாரே
என்று எண்ணியபடி
நோயாளிகள் சென்றனர்.
வழியிலேயே
அவர்களின்
நோய் விலக , வியந்தனர்.
அவர்களில் ஒருவன்,
ஒருவன் மட்டும்
ஆண்டவரை நோக்கி ஓடினான்,
ஆண்டவரே
நன்றி என்று
கால்கள் தொட்டு கதறினான்.
ஒரு பானை சோற்றுக்குப்
பதம்
ஒரு சோறு தானே.
இதுவரை
தன்னை ஒதுக்கி வைத்த
சமுதாயத்தின் முன்
பதுங்காமல் நின்றான் அவன்.
இயேசு புன்னகைத்தார்,
மற்றவர்கள் எங்கே ?
வேண்டுதல்களில் பத்துபேர்
நன்றி செலுத்துதல்
ஒற்றை மனிதனா ?
செல்.
உன் நம்பிக்கை தான்
உன்னை நலமாக்கிற்று
என்று சொல்.
என்றார்.
No comments:
Post a Comment