Friday, August 3, 2018

அசுத்த ஆவி அகல்கிறது


உடல் அடையும்
கல்லறைகளுக்கிடையே இருந்து
அசுத்த ஆவிபிடித்தவன்
ஒருவன்
அலறினான்.

மலைகளோடு கூச்சலிட்டு
கல்லறைகளோடு
படுத்துக் கிடந்தவன் அவன்.

நரம்புகளில் பாயும் இரத்தத்தை
கற்களால் கீறி
கண்களால் பார்த்துக்
கொண்டிருந்தவன் அவன்.

சங்கிலிகளால்
பிணைக்கப்பட்டிருந்தும்
இணக்கத்துக்கு வரமறுத்த
இரும்பு நோயாளி அவன்.

பல பேய்களின்
மாநாடு அவன் தேகம்.
அதனால்
பல நோய்களின்
படுக்கையறையாகவும்
நீண்டு கிடந்தது.

அவனுடைய
கண்களுக்கு இயேசு
தெரிந்தார்.
இயேசுவாய்.

என்னை வதைக்கவேண்டாம்
எங்களை
சிதைக்க வேண்டாம்.
நீர் கடவுளின் மகன்
நானறிவேன்.
விட்டுவிடும் என்னை
கட்டளையிட்டு கலைத்து விடாதேயும்
என்று உறுமினான்.

இயேசுவின் கண்களில்
உறுதி உலவியது
பேயின் கண்களில்
கிலி பரவியது.

துரத்துவதாய் இருந்தால்
அதோ
அந்த பன்றிக் கூட்டத்தில்
புகலிடம் தாரும் என
அசுத்த ஆவிகள்
விண்ணப்பம் வைத்தன.

இயேசு
அனுமதித்தார்.
பேய்கள்
மனிதனை விட்டுவிட்டு
பன்றிகளில் புகுந்தன.

மனிதன் நலமானான்
பன்றிகள்
பேய்களின் புகுதலால்
சரிவில் புரண்டு,
கடலுள் பாய்ந்து
காணாமல் போயின.

o

பேய் பிடித்த இன்னும்பலர்
பரமன் பார்வைக்காய்
பார்த்திருந்தனர்.
பேய்களோ
பரமனைப் பார்த்ததும்
பதறின,
உடல்களை விட்டுச் சிதறின.

No comments:

Post a Comment