செவிடனும் திக்குவாயனுமாய்
சமீபித்தான் ஒருவன்.
காதுகள் திறந்தால்
ஓசைகளோடு வசிக்கலாமே
திக்கு வாய்
தீருமெனில்
இசையையும் வாசிக்கலாமே
மனதுக்குள் கனவுகள்
விழுதிறக்க
ஆலமர நம்பிக்கையோடு
ஆண்டவரிடம் வந்தான்.
என்
செவிட்டை விரட்டுவாய்
திக்குவாய் தீர்க்குவாய்.
பணிவுடன் பணிந்தான்.
எப்பெத்தா என்றார்
இயேசு.
திறக்கப்படு என்பதே அதன் பொருள்,
திறந்து வைத்தார்
பரம் பொருள்.
சொன்னதைக் கேட்டான்,
காதுகளில் ஆச்சரிய மழை,
வார்த்தைகள் இப்போது
வாசலோடு விழவில்லை
உள்ளுக்குள் வழிந்தது.
வார்த்தைகளுக்கு இப்போது
முட்டி வலி இல்லை,
அவை
நொண்டாமல் நடந்தன.
இன்னொரு புதுமை
இப்படி முடிந்தது
இன்னொரு வாழ்வு
இப்படி விடிந்தது.
No comments:
Post a Comment