சமாரியா நோக்கிய
பயணத்தில் களைப்புற்று
இயேசு
கிணறொன்றின் கரையில்
தாகத்தோடு அமர்ந்தார்.
நண்பகல் வெயில் விரிக்க,
கிணற்றில் நீரெடுக்க
சமாரிய மங்கை ஒருத்தி
குடத்துடன் வந்தாள்.
மாதே,
தண்ணீர் தருவாய்
தாகம் கொள்கிறது நாவு.
இறைமகன் விண்ணப்பித்தார்.
அச்சத்தில் விழித்தாள்
அச் சமாரியப் பெண்.
யூதர் பரம்பரையே,
சமாரியரோடு
சகவாசம் கொள்வதில்லையே.
தண்ணீர் தரும் தகுதி
எனக்கில்லையே என்றாள்.
இயேசுவோ,
என்னை அறிந்திருந்தால்
நீயே
வாழ்வின் தண்ணீரை
வழங்கக் கேட்டிருப்பாய்.
நானும் கொடுத்திருப்பேன்
புன்னகையுடன் வந்தது பதில்.
ஆழமான கிணறிருக்கு,
கையில் கயிறு எங்கிருக்கு ?
தண்ணீர் எடுக்கும்
தந்திர வித்தை என்னவோ ?
மங்கை சிரித்துக்கொண்டே வினவினாள்.
இக்கிணற்றின் நீர்
அடுத்த தாகத்தின் அனுமதிச் சீட்டு.
வாழ்வின் நீர்
நிரந்தமாய் உன்
தாகம் தணிக்கும்.
நிரந்தரத் தீர்வு உண்டெனில்
சலுகைச் சமாதானங்கள்
எனக்கெதற்கு
அதிசய நீரை
நீர் எனக்குத் தாரும்.
நீள் தொலைவு நடந்து
பாதங்கள் பழுதடைகின்றன.
பெண் பணிந்தாள்.
உன் கணவனை
என்னருகே அழைத்து வா.
பொருள் பொதிந்த பார்வையில்
அருளாளர் சொன்னார்.
அவளோ,
கணவன் இல்லையே என
கண் கலங்கினாள்.
இயேசு பார்த்தார்.
உண்மை சொன்னதில்
உளம் மகிழ்ந்தார்.
உனக்கு கணவர் ஐவர் இருந்தனர்.
இப்போது இருப்பவன்
கணவன் அல்லன் என்றார்.
ஆச்சரியம் பூச்சொரிய
விழி மின்னல் வீச்செறிய
அவள் அவரை பார்த்தாள்.
உண்மையில்
நீர்
உன்னதரே
இதயம் தொட்ட இறைவாக்கினரே.
என்று பணிந்தாள்.
பரமபிதாவை தொழுவதில்
பழுதின்றி வாழ்
இயேசு பேசினார்.
மெசியா வருவார் என்பதை
அறிவேன் நான்.
வந்ததும் அறிவியும் என்றாள்.
இயேசுவோ,
உன்னோடு பேசும்
நானே அவர்.
அறுவடைக்காலம்
அண்மையில் உள்ளது
அரிவாள் முனைகள்
ஆயத்தமாகட்டும்
என்றாள்.
அவள்
ஊரெங்கும் ஓடிச் சென்று
வியப்புச் செய்தியை விதைத்தாள்.
வயிற்றில் பசி
சம்மணமிட்டு அமர
சீடர்கள் கேட்டனர்
உணவு வாங்கி வரவா ?
தந்தையின் விருப்பத்தை
தரணியில்
செயல் படுத்துவதே
அவர்
தனையனாம் எனக்கு உணவு.
வயல்வெளிகளை பாருங்கள்,
இலைகளின் இடையே
தலை நீட்டும் கதிர்கள் எல்லாம்
அறுவடைப் பக்குவத்தில்
தலையாட்டுகின்றன,
அறுப்பவர்கள் கூலிகிடைப்பதால்
மனசின்
சந்தோசக் கலங்களில்
புன்னகை நிறைக்கிறார்கள்,
உரிமையாளன்
அறுவடைப் பயனின்
அளவைக் கண்டு
ஆனந்தத்தில் திளைக்கிறான்.
என்றார்
சீடர்கள்
தலையாட்டினர்
காற்றில் ஆடும் இலைகளென.
No comments:
Post a Comment