Friday, August 3, 2018

கிறிஸ்தவ வரலாறு : 9 – போப்பின் அதிகாரம்



கி.பி 1073 முதல் 1216 வரையுள்ள காலகட்டம் போப்பின் அதிகாரத்தின் உச்சகட்டம் என்று வர்ணிக்கப்படுகிறது. ஏழாம் கிரிகோரி எனும் போப் வந்து ஏராளமான மாறுதல்களைத் திருச்சபையில் செய்தார். திருச்சபையில் இருந்த சீர்கேடுகளை ஒழிப்பதற்கு மிகவும் கடினமாக பாடுபட்டார். குறுக்கு வழியில் இடம் பிடித்தல், தலைமைப் பதவிக்கு போராட்டங்கள் போன்றவற்றை இவர் வெறுத்தார். இவர் காலம் ஒரு களையெடுப்புக் காலம் என்று கூறலாம்.

குருத்துவ நிலையில் இருப்பவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று முதலாம் மகா கிரிகோரி சொன்னதை இவர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திச் சொன்னார். திருமணம் செய்து கொள்பவர்கள் பலவிதமான சிந்தனைகளில் தங்கள் இறைபணிக்கான முக்கியத்துவத்தை இழந்து விடுவார்கள் என்பதும், திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்கையில் கடவுள் பணி இரண்டாம் பட்சமாகி விடும் என்னும் பயமும் துறவறமே தேவை என்னும் கொள்கையை இவர் எடுக்க பின் புலமாய் இருந்தன.

இவர் காலத்தில் அரசுக்கும், மதத்துக்கும் இடையே இருந்த பலமான இணைப்பு நொறுக்கப்பட்டது. அரசுகள் மதங்களை கட்டுப்படுத்துவதும், தலைவர் நியமனங்களில் தலையிடுவதும் இவருடைய காலத்தில் விலகியது. இதனால் மதம் தன்னுடைய சுதந்திரத் தளத்தை மீட்டுக் கொண்டது.

இந்த காலகட்டத்தில் வாழ்ந்த குறிப்பிடத் தக்க இன்னொரு போப் மூன்றாம் இன்னசெண்ட் என்பவராவர். போப் உலக கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் வழிகாட்டி என்பதில் உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்தவர் இவர். கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி நாட்டை ஆளும் அரசர்களை விட அதிகாரம் படைத்தவர் போப் என்றும், இவர் கிறிஸ்துவின் சீடரான பேதுருவின் வழித்தோன்றல் என்பதிலும் உறுதியான பிடிப்பு கொண்டிருந்தார். எனவே தாழ்ச்சியும், மனத் தூய்மையும், ஆழமான இறை விசுவாசமும், எதையும் கடவுளின் பெயரால் எதிர்த்து நின்று செயிக்கும் உறுதியும் கொண்டிருந்தார்.

தன்னுடைய மனைவியை சுயநலமாய் விவாகரத்து செய்த பிரான்ஸ் மன்னன் பிலிப் பகஸ்டஸ்க்கு பகிரங்க கண்டனம் தெரிவித்து மனைவியை மறுபடியும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இவர் கட்டாயப் படுத்தினார். மன்னன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுத்தான். போப் விடவில்லை, நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார் இதனால் நாடு ஸ்தம்பித்தது. ஆலயங்கள் மூடப்பட்டன, நாட்டில் ஒரு கொந்தளிப்பான சூழல் உருவானது. மன்னன் தன் மனைவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டான். போப் தன்னுடைய போராட்டத்தில் வெற்றி பெற்றார்.

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் வளர்ச்சிக்கு போப் மிகவும் தீவிரமாய் உழைத்தார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். கத்தோலிக்க மதத்தினருக்காக சில சட்ட திட்டங்களையும் இவர் வகுத்தார். அதற்காக ஒரு சபையையும் இவர் தன்னுடைய பணிநாட்களில் ஏற்படுத்தினார்

கொள்கைகளை நிலைநாட்டுவதற்காக அரசர்களையும் துணிவுடன் போப் எதிர்த்ததால் பல நாட்டு மன்னர்களுக்கு போப்பின் அதிகார மையத்தின் மீது வெறுப்பும், அதிருப்தியும் நிலவியது. அரசரும் அவனுக்கு ஆதரவாய் இருந்தவர்களும் ஒட்டு மொத்தமாக போப் பின் மீது அதிருப்தியடைந்தார்கள். ஆனால் போப் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் திருச்சபைச் சட்டங்களையும், திட்டங்களையும் செயல்படுத்துவதில் வீரத்துடன் செயல்பட்டது. எனவே அரசர்கள் போப்புக்கு எதிராக செயல்பட்டார்கள்.

எட்டாம் போனிபஸ் போப்பாக தலைமைப் பொறுப்பை ஏற்றபோது நிலமை இன்னும் மோசமானது. கி.பி 1294 முதல் 1303 வரையிலான காலகட்டத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. பிரான்ஸ் நாட்டில் பிலிப் என்னும் அரசன் ஆண்டு கொண்டிருந்தபோது அவன் தன்னுடைய அரச எல்லைக்கு உட்பட்ட இடங்களிலிருந்து போப்புக்கு பணம் எதுவும் செல்லாமல் தடை விதித்தான். இங்கிலாந்தை ஆண்டு வந்த எட்வர்ட் மன்னனும் போப்புக்கு எதிராக செயல்பட்டார். தன்னுடைய அரசிலிருந்தும் போக்குக்கு பணம் செல்வதைத் தடுத்தார். குருத்துவப் பணி செய்து வந்தவர்களுக்கு பல்வேறு இன்னல்களையும் செய்ய ஆரம்பித்தான்.

போப் தனக்கும் திருச்சபைக்கும் எதிராக பெரிய அலை எழுவதைக் கண்டு அஞ்சவில்லை. இறைமகன் இயேசு நியமித்த திருச்சபையின் வழித்தோன்றல் தான் என்றும், மீட்படைய வேண்டுமெனில் போப்பின் வார்த்தைகளை மதித்து நடக்கவேண்டும் என்றும் துணிச்சலாய் அறிக்கை வெளியிட்டார். ஆனால் அரசுகளின் கோபத்தை அது கிளறிவிட்டது. பிரான்ஸ் மன்னன் பிலிப் படையெடுத்து வந்து போப்பை கைது செய்து சிறையில் அடைத்தான். அதுவே போப் எட்டாம் போனிபஸின் மரணத்துக்குக் காரணமாயிற்று.

அதன்பின் 1305 முதல் 1377 வரையுள்ள காலகட்டத்தில் போப்பாக நியமிக்கப் படுபவர் யார் என்பதை நிர்ணயிப்பதில் பிரான்ஸ் மன்னனும் பங்கும் இருந்தது. ஐந்தாம் கிளமெண்ட் என்னும் போப் திருச்சபையின் தலைமையிடத்தை ரோமிலிருந்து பிரான்ஸ் நாட்டிலுள்ள ‘அவிக்னோன்’ என்னுமிடத்திற்கு மாற்றினார். இந்த காலகட்டத்தில் போப்பாக தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தியவர்கள் நாட்டின் அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் மதம் சார்ந்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினர். எனவே போப்பிற்கு மதத்துக்கு வெளியே இருந்த அதிகார வளையம் நீர்த்துப் போனது.

போப் என்பவர் அரசுகளுடன் போரிடவோ, பிரச்சினைகளில் ஈடுபடவோ வேண்டாம் என்னும் நிலை உருவானது. எனவே ஆங்காங்கே பலர் தான் தான் போப் என்று சொல்லிக் கொண்டு தங்களின் கீழ் சில கிறிஸ்தவக் குழுக்களை இணைத்துக் கொண்டு பணியாற்றத் துவங்கினார்கள். பிரான்ஸ் நாட்டிற்கு தலைமையிடம் மாற்றப்பட்டதிலிருந்து குழப்பங்கள் ஏற்படத் துவங்கின. எனவே 1377ல் போப் 11ம் கிரிகோரி தலைமையிடத்தை மீண்டும் ரோமுக்கே திருப்பினார்.

இந்த குழப்பங்களை எல்லாம் தீர்ப்பதற்காக கி.பி 1414 ல் கான்ஸ்டன்ஸ் என்னுமிடத்தில் திருச்சபை மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல கிறிஸ்தவத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். இதில் நான்கு பேர் தாங்கள் தான் போப் என்று வாதிட்டார்கள். அவர்களுக்காய் வாதிட ஒரு ஆதரவாளர் குழுக்களையும் அவர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். இதில் உடன்பாடு ஏற்படாததால் நான்குபேருமே நிராகரிக்கப்பட்டு புதிய போப் ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்!

1378 முதல் மீண்டும் போப்பாண்டவர்கள் ரோமிலிருந்தே பணியாற்றத் துவங்கினார்கள். ஆனால் இப்போது அவர்களுடைய அதிகாரம் வலுவிழந்திருந்தது. அரசுகளின் எதிர்ப்பும், தலைவராக வேண்டும் என்று போட்டியிடும் மனப்பான்மையில் இருந்த குழுக்களின் செயல்பாடுகளும் போப்பின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்தன.
போப்பின் அதிகாரத்துக்கான காரணங்கள்

உலக அளவில் கிறிஸ்தவம் எல்லா இடங்களிலும் நுழைந்தாலும் வளர்ந்தாலும் பொதுவான தலைமை ரோமிலேயே இருந்தது. தனியே கொள்கை ரீதியினான தனித்தனி கிறிஸ்தவ இயக்கங்கள் சில இயங்கிய போதும் மொத்தத்தில் ரோம் போப்பின் கீழே கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து காணப்பட்டனர்.

அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

உலகின் முதல் போப் ‘பேதுரு’ இயேசுவின் அன்புக்குரிய சீடர். இயேசு அவரிடம் ‘உன் பெயர் பாறை. உன் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்’ என்று கூறியிருந்தார். எனவே பேதுருவின் தலைமையைப் போலவே அவருடைய இடத்திற்கு வரும் மற்ற போப் களின் தலைமையும் மதிக்கப்பட்டது.

அப்போஸ்தலர்கள் காலத்தில் பேதுருவின் பணி மிகவும் சிறப்பானதாக இருந்தது. ரோம் நகர் கிறிஸ்தவத்தின் ஆழமான துவக்கமாய் இருந்தது. பேதுருவைத் தவிர பவுலும் ரோமில் சிறப்பாக கிறிஸ்தவப் போதனைகள் செய்திருந்தார்.

போப்பின் ஆளுகை மிகவும் சரியானதாக இருந்தது. கிறிஸ்தவ மதத்திற்குள் கொள்கை கோட்பாடு ரீதியான தர்க்கங்கள் முளைத்தபோது போப் கிறிஸ்தவர்களை சரியான பாதையில் வழி நடத்தினார்.

துறவற சபைகள் நுழைந்தபோது அவர் கிறிஸ்தவ அடிப்படை நம்பிக்கைகளைச் சிதைக்காத துறவற சபைகளை அங்கீகரித்தார். அது துறவற சபைகளின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாயிற்று.

உலகெங்கும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப குருக்களையும், பேராயர்களையும் அனுப்புவதில் போப் மிகவும் ஆர்வம் காட்டினர். உலகெங்கும் போய் நற்செய்தியை அறிவியுங்கள் எனும் இயேசுவின் போதனைப்படி வாழ்ந்தார்கள் போப்பாக அமர்ந்தோர்.

ரோம் நகரம் மற்ற நகரங்களை விட உயர்ந்ததாய் கருதப்பட்டது. எனவே ரோம் நகரில் இருக்கும் போப் அதிக அதிகாரம் வாய்ந்தவர் எனும் கருத்து நிலவியது.

‘கடவுளின் நகரம்’ எனும் புனித அகுஸ்தீனாரின் நூல் ரோமை தலைமையை முக்கியத்துவப்படுத்தியிருந்தது. ரோம் போப் தலைமைக்குச் சிறந்தவர் என்றும் அவரே உண்மையான அதிகாரத்தில் இருப்பவர் என்றும் நூல் கூறியது.
இவையெல்லாம் போப்பின் அதிகாரத்தைக் குறித்த ஒரு பொதுவான தகவலை உலகக் கிறிஸ்தவ இயக்கங்களுக்குக் கூறியது. இவை போப்பின் அதிகார வரையறைக்குக் காரணமாயிற்று.

Advertisements

No comments:

Post a Comment