Friday, August 3, 2018

வாய்மையே இறைவன் !





வாய்மை எனப்படுவது யாதெனில் எப்போதும் வாய்மையே பேசுதல் ! வாய்மைக்கு இதை விட வித்தியாசமான விளக்கத்தை யாரேனும் கொடுத்தால், அவர் எத்துணை பெரியவராய் இருந்தாலும் ஒதுக்கி விடலாம். தவறில்லை.

வாய்மை என்பது கறைபடியா இதயத்தின் வாய்மொழி. வாய்மை என்பது தூய்மையின் திறவு கோல். வாய்மை என்பது மகிழ்வின் மந்திரக்கோல்.

வாய்மை பேசுதல் என்பது மனிதர்களுக்கு இயல்பாய் வரவேண்டிய ஒரு செயல். ஆனால் அது இன்றைக்கு அபூர்வச் செயல்போலக் காட்சியளிக்கிறது. அந்த அளவுக்கு வாய்மை நமது வாழ்க்கையை விட்டு விலகிச் சென்று விட்டது.

உதாரணமாக, ஆட்டோவில் தவற விட்ட யாரோ ஒருவரின் பணத்தை ஆட்டோக்காரர் திரும்ப ஒப்படைத்தால் அது தலைப்புச் செய்தியாகிறது. ஏதேனும் ஒரு அரசியல்வாதி, உண்மையே பேசுபவராக இருந்தால் அவர் வேற்றுக்கிரகவாசி போல பார்க்கப்படுகிறார். ஏதாவது ஒரு அதிகாரி உண்மைக்கு ஏற்ப செயல்பட்டால் அவர் வியப்புக் குறியீடாய் விமர்சிக்கப்படுகிறார்.

பிழையாய் இருக்க வேண்டிய பொய்மை இயல்பாகி விட்டதால், இயல்பாய் இருக்க வேண்டிய வாய்மை இன்று அபூர்வமாகி விட்டது. அதனால் தான் இறைத் தன்மையின் நிறைவு எல்லா இடங்களிலும் குறைப்பிரசவமாகவே காட்சியளிக்கிறது.

வாய்மை என்பது தங்கத்தைப் போன்றது. அதன் மதிப்பு அதைச் சுற்றியிருக்கும் பொய்மையெனும் அழுக்குகளை அகற்றுவதன் மூலம் தெரியும் என்கிறார் லியோ டால்ஸ்டாய்.

வாய்மை என்பது இயல்பான குணம். அதைச் சுற்றியுள்ள துருக்கள் எல்லாம் நாம் வளர வளர நம்மேல் விழுந்த அழுக்குகள் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அந்த அழுக்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நாம் விலக்க விலக்க, மனிதனில் இறைவனை வெளிப்படச் செய்கிறோம்.

கடவுள் மனிதனைப் படைக்கும் போது தன்னைப் போல ஒரு புனிதப் பிறவியாகவே படைத்தார். தனது இயல்பாகவே படைத்தார். தனது உயிரின் நீட்சியாகவே படைத்தார். அந்த புனிதத்தின் தன்மையை மனித தன்மைகள் மங்கிப் போகச் செய்து விடுகின்றன.

சூரியனையும், சந்திரனையும், உண்மையையும் வெகு நாட்களுக்கு மறைத்து வைக்க முடியாது என்கிறார் புத்தர். காரணம் சூரியனின் உதயம் போல இயல்பானது உண்மையின் இருப்பு.

உண்மையை அறிந்து கொள்ளுங்கள் அது உங்களை விடுதலையாக்கும் ! என்றார் இயேசு. உண்மையற்ற செயலும், சொல்லும் நம்மை அடிமைப்படுத்தும் விஷயங்கள். அவை சங்கிலிகளைப் போல நமது கால்களையும், கைகளையும் இறுக்கிப் பிடிக்கின்றன. அவை பாம்பினைப் போல நமது கழுத்தைச் சுற்றி இறுக்குகின்றன.

உண்மை பேசும்போது மனம் விடுதலையாகிறது. உண்மை விடுதலையின் சின்னம், பொய் அடிமையின் ஆசனம். அதனால் தான் அவர் அப்படிச் சொன்னார் !

உண்மை இறைத்தன்மை உடையது. தெய்வீகத்தின் எல்லைகளில் விளைபவை எல்லாம் உண்மையின் முளைகளே !

உண்மையற்ற நிலை பாவத்தின் வழி. பாவத்தின் வழியில் நடப்பவர்கள் இறைவனைக் காண முடிவதில்லை. வாய்மையின் வாய்க்காலில் மட்டுமே விளைச்சல் இனிமையாக இருக்கும். எத்தனையோ மன்னர்கள் வந்து போனாலும், வாய்மையின் வழி நடந்த அரிச்சந்திரன் மட்டும் தானே மனதில் நிலைக்கிறார் !

எல்லா மதங்களுமே உண்மையை முன்னிறுத்துகின்றன. விஷ்ணு உண்மையின் கடவுள் என்கிறது இந்து மதம். உண்மையற்ற தன்மையை எந்த தத்துவமும், எந்த மதமும் முன்மொழியவுமில்லை, வழி மொழியவும் இல்லை. எனினும் ஆன்மீகவாதிகள் என அடையாளம் சூட்டிக்கொள்ளும் மனிதர்கள் தான் வாய்மையைத் தூக்கி பரணில் போட்டு விட்டார்கள்.

கிறிஸ்தவத்தில் இயேசு, ‘நானே உண்மை’ என்றார். உண்மை என்பது ஒரு குணாதிசயம் என்பதைத் தாண்டி, உண்மை என்பதே மனித உருவம் என்பதன் உயரிய வெளிப்பாடு அது ! உண்மை கடவுளாகிறது. கடவுள் உண்மையாகிறார்.

கடவுளாய் மனிதன் மாற வேண்டுமெனில் அவன் உண்மையாய் மாற வேண்டும். உண்மை கலப்படமற்றது. “எண்பது சதவீதம் உண்மையும், இருபது சதவீதம் பொய்யும்” என இருந்தால் அதை உண்மை என சொல்ல முடியாது. பாலில் விழுவது ஒரு துளி விஷமானாலும் அது தூய்மையற்றதே ! பெரும்பாலும் பால் தானே என வாதாட முடியாது.

அப்படித் தான் உண்மையும்.

இறைவனை உண்மையில் வெளிச்சத்தில் தான் காண முடியும். காரணம் உண்மையே இறைவன். வாய்மை உலவும் வாயே அவன் உறைவிடம்.

உண்மையைப் பேசுபவர்கள் தான் அமைதியை உணர்வார்கள். உள்ளத்தின் ஆழத்தில் அமைதியின் நதி பிரவாகமெடுக்க வேண்டுமெனில், இதயத்தின் ஊற்று உண்மையின் துளிகளால் வழியவேண்டும்.

உண்மை என்பது பயிரைப் போன்றது. மெதுவாய் வளரும். நிலையாய் வளரும். கடைசியில் கனியைக் கொடுக்கும். பிழைகள் எல்லாம் களைகள் போன்றவை. சட்டென செழிக்கும், சடுதியில் அழியும். இறையும் அப்படியே, நிலையான வழி, மெதுவான வழி அதுவே தேவ வழி. ஆன்மீகத்தில் ஃபாஸ்ட் புட் இல்லை ! ஆரோக்கிய ஆன்மீகம் மெதுவான நிலையான வலுவான வளர்ச்சியே !

இறைவன் அன்பானவர் என்கிறோம். அன்பே இறைவன் என்கிறோம். அந்த அன்பின் வெளிப்பாடு என்ன தெரியுமா ? உண்மை பேசுதல். உண்மையான அன்பு பொய் முகமூடியுடன் பேசுவதில்லை. உண்மையாய் வாழ்வது, தெய்வீகத்தின் அடையாளம். இறைவனைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக நமது முகங்கள் மாறுவது நாம் வாய்மையின் வழியில் வாழ்கையில் தான்

உண்மை என்பது வேர்களைப் போல உள்ளே சென்று உறவுகளை வலுவாக்கும். இறைவனின் இயல்பும் அதுவே ! இதயத்தின் உள்ளே சென்று உறவினை வலுவாக்குவது. நம்முடைய வாழ்க்கையில் நாம் உறவுகளை வலுவாக்க முயலும் போது இறைவனின் இயல்பை வெளிப்படுத்துகிறோம். உறவுகளின் இறுக்கத்தில் இறைவனைப் பிரதிபலிப்பவர்களாக மாறுகிறோம்.

பாவம் என்பது பல நோய்களைக் கொண்டு வரும் என்பது நாம் அறிந்ததே. வாய்மை பேசா நிலையும் பல நோய்களைக் கொண்டு வரும் என்கிறது மருத்துவம். குறிப்பாக மன அழுத்தம், பதட்டம், எரிச்சல், தலைவலி, உயர்குருதி அழுத்தம், அல்சர் போன்ற நோய்களை அது கொண்டு வரும் என மருத்துவம் எச்சரிக்கிறது. பாவமற்ற நிலை இறைவனின் விருப்பம். நோய்களற்ற நிலைக்கும் அதுவே தொடக்கம்.

இறைவனின் அருகாமை நமது பயத்தை விலக்கும். உண்மை பேசுவதும் பயமற்ற சூழலை உருவாக்கும். தற்காலிக இன்னல்களைப் போருட்படுத்தாமல் எப்போதும் உண்மையில் நிலைத்திருப்பது ஆன்மீகத்திற்கு வளமானது. அது இறைவனின் அருகில் இருக்கும் உணர்வை நமக்குத் தரும்.

உண்மை சட்டரீதியானது. கட்டளைகளுக்கு உட்பட்டது. இறைவனின் நிபந்தனைகளின் எல்லை மீறாதது. வெள்ளை பொய்கள், சிவப்பு பொய்கள் என்றெல்லாம் வர்ணமடிப்பவை நம்மை குழப்பும் யுத்திகள். வாய்மை என்பது பொய்யின் நிழலும் விழாத நிலையே ! அந்த நிலையே தேவ நிலை.

தன்னம்பிக்கையின் வேர்களை வலுவூட்டவேண்டுமெனில் உண்மையைப் பேசிப் பழகினால் போதும். உண்மையைப் பேசிப் பழகுபவர்களுக்கு பொய்களை நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை. குற்ற உணர்வற்ற மன நிலைக்கு உண்மையின் விரல்களைப் பிடித்து நடந்தாலே போதுமானது.

உண்மையைப் பேசுவது தான் நமது இறை இயல்பை மெல்ல மெல்ல வெளியே கொண்டு வந்து இறைவனின் ஒளியில் நிறுத்தும். நம்மை நாம் உணரவும், இறையில் நாம் வளரவும் அது தான் நம்மை வனையும். பொய் பேசுவது கோழைகளின் செயல், உண்மையே வலிமையின் அடையாளம். அதுவே இறையின் அடையாளம்.
சத்தியத்தின் இயல்புகளே இறைவனின் இயல்புகள். சத்தியத்தின் வழியே இறைவனின் வழி. சத்தியமே இறைவன் ! இறைவனை நேசிக்க வேண்டுமா ? சத்தியத்தை நேசிப்போம் !

No comments:

Post a Comment